வளிநிலை (எனும் ) சீகுங்5…26/11/2012

5. செம்பொருள் மூச்சு

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்

மல்லல் மா ஞாலம் கரி …குறள் 245

அருளோடு  வாழ்பவர்களுக்கு துன்பமில்லை  என்பதற்கு,நிறைந்த காற்றோடு வாழும் உலகு வளமையோடு இருப்பதே சான்று .

கருணையும்  காற்றும் ஒன்றே  என்பது நமக்குப் புரிகிறது .அடுத்தது முதற்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்

முதற்றே உலகு

எழுத்துக்களுக்கு அகரம் முதல் போன்று உலகிற்கு கண்கண்ட மூலம் பகவன் என்னும் ஞாயிறே .காலத்தைப் பகுப்பவன் என்பதினால்,

பகவன் என்று  பெயர் .இருக்கு வேதத்தில் குறிப்பிட்டுள்ள  விசுவாமித்திரன் என்ற அரசத்துறவிக்கு அறிவுவிளக்கமாகத் தோன்றிய

காயத்திரி மந்திரமும் முதற்குறளும் ஒன்றே  என்பது புரிகறது

காயத்திரிப் பயிற்சியின் போது பிராணாயாமப் பயிற்சியும் உடன்செல்லும் .அதுபோன்றே உலகச்சுழற்சியால் காலையில் தோன்றும் ஆதிபகவன் ஆற்றல் நமக்கு முழுமையாகப் புத்துணர்ச்சி அளிக்கப் பயன்படுவது வளிநிலை எனும் மூச்சுப்பயிற்சியே .

முதற்குறளும் காயத்திரியும் மூச்சும் ஒன்றே .அகரம் போன்றவன் ஆதிபகவன் என்பது குறள் .எல்லாவுலகிற்கும் ஒளிதரும் சூரியன் என்  அகத்தில் எழட்டும் என்பது காயத்திரி .

இனி இப்பயிற்சியில் உள்ள சில நுட்பங்களைப் பார்போம் .நம்  உணர்வுகள் எல்லாம் ஒருமை சார்ந்த இருமையே .அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது.எனவே புறஞாயிறு போன்றே நம் உள்ளே உள்ளது அகஞாயிறு .இந்த உள்ளொளியின் துணையுடனே நாம்

எல்லாவற்றையும் அறிகிறோம் , கற்கிறோம் .இந்த அகமும் புறமும் வெவ்வேறு போல் தோன்றினாலும் உண்மையில் ஒன்றேயாம் .

நெருப்பு அணையாமல் இருக்க உயிர்வளி (oxygen) தேவைப்படுவது போல, சூரியஒளியின் உணர்வு நம்முள் அணையாமல் இருக்கப் பயன்படுவது வளிநிலைப் பயிற்சியே .

எந்நேரமும் நடுவுநிலையுடன் இருக்க உதவுவதும் இப்பயிற்சியே

.”கேடும் பெருக்கும் இல்லல்ல நெஞ்சத்துக்

 கோடாமை சான்றோர்க்கு அணி ” குறள் 115

இந்த அருள்நிலை மூச்சுப்பயிற்சியை நாம் உணர்வுமொழிகளுடன் மேற்கொள்ளும்போது அதுவே உலகவாழ்க்கைக்குத் தேவையான “பொருள் என்னும் பொய்யாவிளக்காக” மாறுகிறது .

நடைமுறைக்கு உதவாத தத்துவப் பிதற்றலுக்கு “வெற்றுவேதாந்தம்” என்று பெயர் . ஆனால் அருளும் பொருளும் அளிக்கவல்ல மூச்சுயோகப் பயிற்சிக்கு “மெய்ப்பொருள்” என்றே பெயர் .இந்த மெய் (உடல்) தனக்குள் பொருள் (புதையல்)இதுவே .தனக்குள் இருந்து தன்னையே மேம்படுத்தும் பொருள் இது. இதன் ஆற்றல் நம் நாடினரம்புகளுக்கு உள்ளே எல்லாம் ஊடுருவி அவற்றை மிக வலிமைப்படுதக் கூடியது .

வளிநிலை ஆற்றல் உள்ளிருந்து உருவாக்கப்பட வேண்டும் . பிறகு எல்லாஇடத்தும் பரப்பப்பட வேண்டும்.(generation and dispersal)

எல்லா மூசுப்பயிற்சிக்கும் இவை  இரண்டே அடிப்படை .

இனி வளிநிலைப் பயிற்சி ஒன்றில் மூழ்கித் திளைப்போம் .திண்மை அடைவோம் .அதற்குமுன் நம் மனம் எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு இருவர் அறிவுரையுடன் துவக்குவோம் .காலை மாலை இருவேளையும் இதே  முறை பின்பற்றவும் .

1.இராமலிங்க அடிகள் அவர்களின் “எல்லாம் செயல்கூடும்” என்ற மனவள  மாமந்திரத்தை 21 முறை மனத்துள் கூறவும்

2.பிரெஞ்சு உளவியல் அறிஞர் emile coue (1857-1926) உருவாக்கிய கீழ்க்கண்ட மனவள மந்திரச் சொற்றொடரை 21 முறை கூறவும்

EVERYDAY IN EVERYWAY, I AM GETTING BETTER AND BETTER

.ஒவ்வொரு நாளும் எல்லா வகையிலும் மேன்மையடைகிறேன் , மேன்மையடைகிறேன்.( எம் மொழிபெயர்ப்பு _ஆர் )

இப்பயிற்சிக்கு சில  நிமிடங்களே போதும் .இப்பயிற்சி ஒருவர் உடலிலும் உள்ளத்திலும் அற்புதங்களை உண்டாக்கும் .

இப்போது முதல் வளிநிலைப் பயிற்சி .சீரான மூச்சுடன் பயில வேண்டும் .

கண்கள் பாதியளவு மூடி இருத்தல் நலம் . மனவுணர்வு மூச்சின் மீதே இருக்க வேண்டும் மூச்சு உள்ளிழுக்கும் போது கருவிழி நிதானமாக

மேல்நோக்கி புருவமத்தியைப் பார்க்க வேண்டும். மூச்சு வெளியே விடும்போது கருவிழி நோக்கு  கீழ்நோக்கி மூக்கின் வாயிலின் அருகே இருக்க வேண்டும் .நிதான  மூச்சுடன் பயில வேண்டும் .பதற்றமே கூடாது .எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம் . உணர்வெல்லாம் செயல் மேல் இருக்கட்டும் .விளைவுகள் தாமே நன்மையாய் முடியும் .நம் பணியை செய்தால் மூச்சு, தன் பணியைச செய்யும் .இந்த துவக்கநிலைப் பயிற்சியை காலையும் மாலையும் 10 நிமிடங்கள் செய்தல் நலம் ,இது போல் துவக்கநிலைப் பயிற்சியில் பல வகைகள் (variants) உள்ளன . அவற்றைப்  பின்னர் காண்போம் .கையாள்வோம் .திருமூலர் அழைக்கிறார் .

“கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி

வீணாத்  தண்டூடே வெளியுறத் தானோக்கி

காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு

வானாள் அடைக்கும் வழி அதுவாமே” . திருமந்திரம் 588.

“சிற்றின்பத்தின் மீது  செல்லாது தடுத்து, மனதை ஒருமுகப்படுத்தி, வீணாதண்டு  எனும்  நடுநாடியின் வழியே பிராணனுடன் செலுத்தி, செவியுணர்வும் , காட்சியுணர்வும், புறஞ்செல்லாமல், உள்நோக்கி, இருப்பவர்க்கு, வாழ்நாள் குறுகாமல் நீண்டிருக்கும் .”

இப்பயிற்சிகள் செய்யும்போது சில அனுபவங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் .வேறு சில அனுபவங்கள் வெவ்வேறாக இருக்கும் . பயிற்சி முறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் . அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நலம் . ஏனென்றால் அவற்றை மெய்ப்பிக்க இயலாது . இதனால் தான் வள்ளலார் சில  அனுபவங்களை “நிராதார லக்ஷணம் ” என்கிறார் .

புறக்காட்சி அனைவர்க்கும் பொது,,, மயக்குவது  . அகக்காட்சி பொதுவன்று .அனால் அறிவளிப்பது .

இதனை திருமூலர் ” முகத்திற் கண்கொண்டு பார்கின்ற மூடர்காள் …. அகத்திற் கண்கொண்டு பார்மின்கள் ” என்பார் .

துவக்கநிலைப் பயிற்சிதானே என்று அசட்டையாக இருக்க வேண்டாம் .துவக்கத்தில் நாம் கற்றுக்கொண்ட செயல்கள் பலவும், நம்  இறுதிவரை துணைவரும் .அகராதியில் சொற்கள் தேட வேண்டுமென்றால், நாம் பிள்ளைப்பருவத்தில் பயின்ற அகரவரிசை துணைநிற்கும் அல்லவா? இது வளிநிலைப் பயிற்சிக்கும் பொருந்தும் .சீராகத் தொடர்ந்து செய்துவரும் இப்பயிற்சி நம்மை இறுதியாகப் 

பெற்றிநிலைக்கு (சித்திநிலை ) அழைத்துச் செல்லும் . இதனயே திருமூலர் கூறுகிறார் .

“நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு

உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்

துயரற நாடியே தூங்க வல்லோர்க்குப்

பயனிது காயம் பயமில்லை தானே “. திருமந்திரம்  605

“விழிகள் இரண்டையும் புருவநடுவில் வைக்க வேண்டும் .மனதையும் பிராணனையும் வெளியே விடாமல் உள்ளே வைத்து , மகிழ்ச்சியுடன் இளைப்பாற வல்லோர்க்கு கிடைக்கும் பயன் என்ன தெரியுமா? இந்த உடல் அழியும் என்ற அச்சமே அவர்களுக்குத் தேவையில்லை . நீடூழி வாழ்வர் …                                                                                 (மூச்சோட்டம் தொடரும்

!!!அடுத்த இதழில் alexandra david neel என்ற பிரெஞ்சுப் பெண்அறிஞரின் மூச்சு ஆராய்ச்சி!!! .

வளிநிலை எனும் சீகுங்4 04/11/2012

4. மந்திரமூச்சு

“வளியினை வாங்கி வயத்தில் அடக்கிய

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்

வளியினும் வேட்டு வளியனுமாமே ” திருமந்திரம் 569

மூச்சுகாற்றை நன்கு உள்வாங்கி, தன்வயப்படுத்தி  கட்டுக்குள் கொண்டுவந்தால், ஒருவருடைய உடல் முதுமையிலும் இளமையுடன் இருக்கும் .

தன்னுள்ளே இருக்கும் பேருணர்வாகிய ஆழ்மனகுருவின் துணையையும் பெற்றால் , காற்றைவிட மென்மையாக எல்லா இடத்திற்கும் செல்லும் ஆற்றல் பெற்றவராக இருக்க முடியும் .

பருவுடலும் நுண்மனமும் ஒன்றாகி உணர்வுடன் கூடி சித்தர் போல் எவ்விடத்தும் எளிதில் செல்ல இயலும் .

இந்த உயிர்மூச்சை எண்ணஅலைகள் துணையுடன், உடலின் எந்தப்பகுதியில் பதியவைக்கிறோமா, அந்தப்பகுதி வலிமை பெறும் .

வலிநிளைப்பயிற்சிகளை நம்நாட்டுச் சித்தர்கள் முற்காலத்தில் உருவாக்கியபோதிலும்,தற்காலத்தில் அவை உறக்கநிலயிலேயே உள்ளன .அவற்றை மறுமலர்ச்சியடையச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு .

இதற்கு மாறாக, சீனத்திலும் ஜப்பானிலும் பலரால் வலிநிளைப்பயிற்சி மக்களுடைய  அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மலர்ந்துவிட்டது.அவர்கள் அரியசெயல்கள் புரிகின்றனர்.

KOZO NISHINO என்ற ஜப்பானிய அறிஞர் மூச்சுப்பயிற்சியால், முதுமையிலும் இளமையோடிருக்கும் வழியறிந்து பலருக்கும் அந்த நுட்பத்தை பயில்விக்கிறார் .

அவரே தம் 86வது அகவையில் இளமையோடு உள்ளார் .

 KANZAWA SENSEI என்ற மற்றொரு ஜப்பானிய வீரக்கலை அறிஞர், மூச்சுணர்வுப் பயிற்சியால், தொலைவிலிருந்தே, மூசாற்றலினாலும் , கையைசைவினாலும், விலங்குகளையும், மனிதர்களையும், வயப்படுத்தி உறங்கவைக்கும் ஆற்றல் பெற்றுள்ளார் . அட்டமாசித்திகளில் இதற்கு

“வசித்துவம் ” என்று பெயர்.

வளிநிலை என்பது வெறுமையாய் மூச்சை உள்வாங்கி வெளியேவிடுவது அன்று. இதில் எண்ணத்தின் பங்கு சரிநிகர் அளவு உண்டு  உலகியல் வாழ்க்கைக்கு நாம் பொருள் ஈட்டுவதுபோல, உடலியல் வாழ்க்கைக்கு நாம் ஈட்டும் பொருளே மூச்சாற்றலாகும். இந்தப்பொருளே மெய்விளக்கு .

“பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

 எண்ணிய தேயத்துச் சென்று ” குறள் 753

.  இக்குறள் இந்த மூச்சுப்பொருட்செல்வத்திற்கும் பொருந்தும் .வளிநிலைப்பயிற்சியால் ஈட்டிய “பொருள்”,

எவ்விடத்தும் சென்று “உடலமனமாசு ” எனும் இருள் அறுக்க வல்லது.

மின்பொறிகள் அறிமுகமாகுமுன்பு, நீரிறைக்க ஏற்றத்தைப் பயன்படுத்துவர். ஒருமுறை ஏறி இறங்கினால் அது வயலுக்கு நீர் பாய்ச்சும்.அதுபோல நம் மூச்சும்,ஒவ்வொருமுறையும், உணர்வுடன் உள்வாங்கி, வெளியே விடப்ப்படும்போதும் உடலும் உள்ளமும் வலிமைபெறும். நம் ஆற்றல் கூடும்.

மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் ஆற்றல்கனல்,உயிர்மூச்சின் துணையுடன் ஒவ்வொரு சக்கரதின்வழியே ஏறும்போதும், அச்ச்சக்கரத்தின் வலிமையையும் தான் எடுத்துக்கொண்டு உச்சியிலுள்ள  ஆயிரயிதழ்த்தாமரையை  (சகஸ்ராரம் ) அடைகின்றது .

எனவே  இந்த உணர்வுமூச்சானது, ஏணியாகவும், ஏறுபவனாகவும், எடுத்துச்செல்லப்படும் பொருளாகவும் உள்ளது.  மூச்சுமண்டலச் செயலால் தான்

மற்ற உடலியக்கங்கள் செயல்படுகின்றன என்று தற்கால அறிவியலும் கூறுகின்றது .அதே  அறிவியல், ஆறு சக்கரங்களுக்கு இணையான . துணையான

ஆறு நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன என்றும் அவை செம்மையாகச் செயல்பட மூச்சுப்பயிற்சி உதவும் என்றும் கூறுகின்றது .

இயல்பான உணவு உண்ணாமல் மூச்சையே உணவாக்கி வாழ்பவர்களுக்கு BREATHARIANS என்று  பெயர் .உலகில் BREATHARIANS பலர் உள்ளனர் .

நம் நாட்டில் சூரியக்கதிர்கலையே மூச்சுடன் உள்வாங்கி உணவாக்கிகொண்டு  வாழ்பவர்களில்  இருவர் குறிப்பிடத்தக்கவர்கள் . 1. குஜராத்தைச் சேர்ந்த ஹீராரதன்  மனேக். 2. சூரியயோகி   என அழைக்கப்படும் உமாசங்கர் என்கின்ற  வங்காளத் துறவி . இக்கட்டுரையாளர் 4 ஆண்டுகளுக்கு முன்பு          திரு,உமாசங்கரைச் சந்தித்தபோது , அவர் தம் சூரியயோக மூச்சுப்பயிற்சி முறைகளை விளக்கினார் .

மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் பல அதிசயங்களை நிகழ்த்தலாம் .இடகலை, பிங்கலை எனும் இட வல  நாசிவளியோட்டங்களை மாற்றிமாற்றி பயன்படுத்தினால் , “வரும்பொருள் ” எனும் எதிர்கால நிகழ்வுகளைக் கூற முடியும் .பலர் நோய் தீர்க்கவும் இயலும்.

யோகிகள் கையில் T வடிவ மரக்கட்டை வைத்திருப்பர் .அதன் பெயர்  யோகதண்டம் .அதனை இட வலப் பக்கங்களில் ஊன்றி மூச்சு ஓட்ட பாதையை மாற்ற முடியும்.இக்கலை பற்றிய செய்முறைகள் “ஞானசரம் ” மற்றும்  “சரயோகம் ” ஆகிய நூல்களில் உள்ளன (இவற்றின் விரிவு பின்னர் )

இந்த சரயோகப் பயிற்சியால் மூளையின் இட வலச் செயல்திறனைக் கூட்ட முடியும்

ஹவாய்த்  தீவுகளில் வாழ்ந்து வரும் கஹுணா  என்ற  தொல்குடியினர் மூச்சுப்பயிற்சியின் வாயிலாக ஆழ்மனதையும் உலகம் முழுதும் பரவியுள்ள இறைமனதையும் தொடர்புகொள்ளும் கலையை  அறிந்துள்ளனர் .தொலைவிலிருந்தே நிகழ்வுகளை இயக்கம் ஆற்றல் உடையவர்கள் இவர்கள்,

இந்த கஹுணா தத்துவங்கள் நம்  வள்ளல் இராமலிங்கர் அவர்கள் தம் “பேருபதேசம்” எனும் உரையில் கூறியுள்ள தத்துவங்களோடு ஒத்துப்போகின்றன . என்ன வியப்பு ,!!!, (இவற்றின் ஒப்பாய்வு பின்னர் ).

இதே போல் 20ஆம்  நூற்றாண்டில் திருவொற்றியூரில் வாழ்ந்த ஞானவள்ளல் பரஞ்சோதி என்ற இசுலாமிய யோகி திடமூச்சை மென்மூச்சாக்கி உணரும் எளியமுறை குண்டலினிப்பயிற்சியினை பல்லாயிரக்கணக்கானோர்க்கு தீட்சை அளித்து பயிற்றுவித்தார் .

இமயமலை அடிவாரத்தில் வாழ்ந்த  சுவாமி ராமா என்ற யோகி மூச்சுயோகப் பயிற்சியினால் இதயத்துடிப்பினை சில நிமிடங்கள் நிறுத்திக் காட்டினார் .

திபெத்திய சித்தியல் நூல்களில் பிராணன, சீ, ஆகியவற்றிற்கு  WINDHORSE என்று  பெயர்

இப்போது திருமந்திரத்திற்கு தாவுகிறோம் . பாய்கிறோம் .

“புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்

 கள்ளுண்ண வேண்டாம் தானே களி தரும

துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்பிக்கும்

உள்ளது  சொன்னோம் உணர்வுடையோர்க்கே ” திருமந்திரம் 566

என்ன அழகாகத் திருமூலர் கூறுகிறார்  பாருங்கள்

“உணர்வுடன் இருப்போர்க்கே  கூறுகின்றேன் .எந்தப் பறவையைக் காட்டிலும் வேகமான, திறமையான இந்த மூச்சுப்பயிற்சி  எனும் குதிரையின் துணையுடன்

எப்போதும் இன்பநிலையில் இருக்கலாம் . இதற்கு கள்ளுண்ணத்  தேவையில்லை .மிகச் சுறுசுறுப்புடன் துள்ளி நடக்கலாம் .சோம்பல் என்பதனை  அறவே தவிர்த்துவிடலாம் “

உயிர்க்காற்றும் மனமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை . இதனை  முன்னமே  நாம் விவரித்துள்ளோம் . மூளை அலைகளை மூச்சின் துணைகொண்டு கட்டுப்படுத்த  முடியும் என்று  கண்டோம் . இது தற்கால அறிவியலார் கண்டுபிடிப்பா ?

நம்  முப்பாட்டனார் சித்தர் திருமூலர் ஞானக்கண்ணில் தோன்றியதாகும் .

“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு

 மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை

 மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்போர்க்கு

 மன்மனதுள்ளே மனோலயமாமே ” திருமந்திரம் 620

“எங்கெல்லாம்  நினைப்புதொழில் செய்யும் மனம்  உள்ளதோ , அங்கே உயிர்க்காற்றும்  உண்டு  எங்கு  மனம் இல்லையோ அங்கே  மனமும் இல்லை .

இந்த  மனதுடன் (காற்றுடன்) மகிழ்ச்சி கண்டோர்க்கு அதுவே மனம் ஒடுங்கும் நிலை எனும்  வெற்றிடமாகும் “.

                                                                                                                                                       (மூச்சோட்டம் தொடரும் )

valinilai 29/09/2012

3.மூச்சே உலகம்

சத்தியோ நிருவாண தீட்சை என்பது வீரசைவ ஒதுகைகளுள் (தீட்சைகளுள் ) முகாமையானது . எங்கும் நிறைந்த அருட்பேரொளி, எல்லா உலகும் அமைதியாய் இருக்கும் நள்ளிரவில், அன்பர்களுக்கு, தன்னை வெளிப்படுத்தும் தீட்சையாகும்.

“உலகம் உறங்கும்போது யோகி விழித்துள்ளான்” என்ற கீதை வரி இங்கு நினைத்தல் நலம். இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கிறது  என்று பாரத்தால் அது நம் ” கட்டுப்பாட்டு அறை” எனும் நம் மூளையிலேயாகும் .

இந்த மூளை அலைகள் 4 வகை என ஏற்கனவே  கண்டோம் . இந்த அலைகள் நம் செயல்பாடுகளுக்கு ஏற்ப மாற்றிமாற்றி நாம் பயன்படுத்தும் கருவி நம் மூச்சேயாகும். உள்ளோட்டம், உள்ளிருப்பு, புறவோட்டம், புறஇருப்பு , என நம் மூச்சின் நான்கு நிலைகளையும் வெவ்வேறு தகவுகளில் (ratio), பயன்படுத்துவது நம் மூளைஅலைகளை நெறிப்படுத்தும் (regulate)  செயலாகும்.

இசுலாத்தில், 5  வேளை தொழுகை தவிர,      ஆறாவதாக  “தஹஜ்ஜுத்” என்கிற நள்ளிரவுத் தொழுகை மிக முகாமையானது .

 “தஹஜ்ஜுத்” குறித்து இசுலாமிய அறிஞர்கள் மிக உயர்வாகாகக் குறிப்பிட்டுள்ளார்கள். வெவ்வேறு பகுதிகளில் தோன்றுவது ஒரே உண்மையே  என்பதனை உணர்க.

வீரசைவம், இசுலாம், இவ்விரண்டின் நள்ளிரவு ஞான நிலையை அடைய மூச்சுணர்வுப்   பயிற்சித் தேர்ச்சி தேவை.

“சூபி” (sufi)  (இசுலாமிய அறிஞர்கள் ) பயிற்சிகளில், இந்திய தத்துவ குண்டலினி சக்கரங்களைப் போல, ஆறு நுண்ணுணர்வு நிலைகளைக் கண்டுள்ளார்கள். ஒவ்வொன்றிற்கும் லத்திபா (latifa)  என்று பெயர்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் திருவாரூரில் வாழ்ந்த கருணையானந்த பூபதிகள் என்ற இசுலாமிய சித்தர் அட்டாங்க யோகச் சிறப்பினை விவரித்துள்ளார்கள் . பேரறிவு என்பது மதங்கள் கடந்த ஒன்று. அதுபோன்றே “மூச்சோட்டமும்” எல்லாம் கடந்த ஒரு பொதுநிலை. “எல்லார்க்கும் பொதுவில் நடம் புரிகின்ற சிவமே “- வள்ளலார்.

இப்போது “அறிவன் சொல் ” எனும் பவுத்த மதம் செல்வோம் . அதன் அடிப்படை நூல் ” ஸ்ம்ருதி உபஸ்தான சூத்திரம் ” ஆகும்.

அடிப்படை தியானம் இரண்டு. 1.சமதா (samatha)  (எ) நடுவுநிலைமை 2. விபச்சனா (vipassana) (எ) நுண்ணோக்கு.

இவ்விரண்டு முறைகளின் சிறப்பே அவை தம் குறிக்கோளை அடைய உணர்வுமூச்சினைப் பயன்படுத்துவதே.

மூச்சு, அருள்நிலை மட்டுமே தருமா என்றால், அல்ல அல்ல , அது பொருள்வளமும் அளிக்க வல்லது.

“முழுமூச்சுடன் இறங்கினான் ” என்ற மரபுத்தொடரே (idiom), இதற்கு சான்று.

அருளும் பொருளும் அளிக்கவல்ல “மூச்சோட்ட” “மூச்சுணர்வு” “வளிநிலை” பயிற்சியை நாம் ஒவ்வொரு நொடியும் கடைப்பிடிக்க வேண்டும். “எத்திசையில் இருந்தாலும் எதவத்தைப்பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே” – சித்தர் பாடல். அது போல் எந்நிலையில் இருந்தாலும் “மூச்சுணர்வுடனே” நாம் இருக்க வேண்டும். தொடக்கத்தில், பயிற்சி, முயற்சியுடன் (effort), நடைபெறும். முதிர்வுநிலையில், உணர்வுமூசோட்டம் முயற்சியின்றி (effortless) தன்னிச்சையாக,    தானேதானாக, நடைபெறும். இது ஒரு இரண்டற்ற நிலையாகும். மூச்சும், உணர்வும், எண்ணமும் ஒன்றான நிலை.

“ஏசு கிருத்துவும் அவர்கள் மீது தன் மூச்சைச் செலுத்தி “தூய உணர்வைப் ” பெறுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார்”.இது bible வசனம் (john 20 : verse 21 ).

ஐம்போருள்களில் , (பஞ்சபூதங்களில்), இந்தக் காற்றே நம் உடலில் உணர்வுமூச்சாக இருந்து, அரும்பெரும் செயல்கலாற்ற வல்லது . மூச்சின் நுட்பம் அறிந்தவனே ” அறிஞன்” ஞானி”  “யோகி’ “அறிவன்’ ” சித்தன்’ “எல்லாமே’ . ” நிலமிசை நீடு வாழ ” இப்பயிற்சி உதவும். உணர்வுமூச்சு பெருகப்பெருக நம் அன்பும் பண்பும் பயனும் கூடும்.

“எல்லாம் ஒன்றே” என்ற இரண்டற்ற (அத்துவித ) ஒருமைநிலையாய் இருப்போம் .

ஒவ்வொரு உணர்வுநிலையிலும் மூச்சாற்றல் செலுத்தி  செய்யும் தியானப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகளைப் பின்னர் காணலாம்.

‘புறஞ்சார்’ வளிநிலையால்  உடல் வலிமையுறும். ‘அகஞ்சார்’ வளிநிலையால் உள்ளவுறுதி கூடும். உடலும் உள்ளமும் ஒன்றே என்ற உண்மை விளங்கும் . “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ‘ திருமந்திரம் 724

BON  என்ற திபெத்திய பழம்மதம் (native religion) பவுத்த்ததுடன் இணைந்து உருவானது ” வஜ்ஜிரயான பவுத்தம் “

.இமமதத்தின் அரிய பயிற்சிகளில் ஒன்று “TUMO YOGA” இப்பயிற்சியால் உடல் வெப்பத்தை கூட்ட முடியும் . இதற்கு மூச்சுணர்வுப் பயிற்சி மிகத் தேவை.

பவுத்தத்தினால்  ஈர்க்கப்பட்ட   J.H. schultz  என்ற செருமானிய அறிஞர் autogenic training (தான்தோன்றி ) எனும்

 உடல்மன – இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நுட்பம் கண்டார்.

jack schwarz என்ற மற்றொரு அமெரிக்க அறிஞர் மூச்ச்சாற்றலினால் மூளை அலைகளைத் நெறிப்படுத்தி  autogenics உடன்

 இணைத்தார். இது ஒரு பெரிய முன்னேற்றமாகும்.

இந்த வளிநிலைப்பயிற்சியால் ஒரு வேதியல் மாற்றம் ( chemical reaction or change) உண்டாவதால் பயிற்சி செய்வோர். எந்தத் துறையிலும் மிகச் சிறந்து விளங்குவர் .தெளிவான முடிவுகள் எடுப்பர். உச்சி முதல் உள்ளங்கால் வரை உயிரோட்டத்துடன் இருப்பர்.

தமிழில் “கால்” என்ற சொல்லுக்கு “காற்று’ என்ற பொருளும் உண்டு. கொஞ்சம் அருணகிரியாரின் “கந்தரலங்காரம்” போவோமா? ” அவன் (முருகன்) கால்பட்டழிந்தது என் தலை மேல் அயன் கையெழுத்தே” என்பார். இதனை முருகன் “திருவடிக்காற்று” என் மூளையில் பட்டு பிரமன் எனக்கு உருவாக்கிய ” தலையெழுத்து”  மாறியது என்றும் கொள்ளலாம்.

இது மெய்யே .

இப்போதைய அறிவியலாளர்கள் மூச்சையும் உணர்வையும் கொண்டு DNAவையே மாற்ற முடியும் என்று கண்டுள்ளார்கள் .

 இவர்களில் முன்னணியில் உள்ளவர்கள்  candace b pert  மற்றும்  bruce lipton ஆவர் .

என்ன? !!! மூக்கின் மேல் விரல் வைக்கத் தோன்றுகிறதா ?

                                                                                                                                         (மூச்சோட்டம் தொடரும் )