மூச்சே உலகம்
from my september 2012 writing
மூச்சே உலகம்
சத்தியோ நிருவாண தீட்சை என்பது வீரசைவ ஒதுகைகளுள் (தீட்சைகளுள் ) முகாமையானது . எங்கும் நிறைந்த அருட்பேரொளி, எல்லா உலகும் அமைதியாய் இருக்கும் நள்ளிரவில், அன்பர்களுக்கு, தன்னை வெளிப்படுத்தும் தீட்சையாகும்.
“உலகம் உறங்கும்போது யோகி விழித்துள்ளான்” என்ற கீதை வரி இங்கு நினைத்தல் நலம். இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கிறது என்று பாரத்தால் அது நம் ” கட்டுப்பாட்டு அறை” எனும் நம் மூளையிலேயாகும் .
இந்த மூளை அலைகள் 4 வகை என ஏற்கனவே கண்டோம் . இந்த அலைகள் நம் செயல்பாடுகளுக்கு ஏற்ப மாற்றிமாற்றி நாம் பயன்படுத்தும் கருவி நம் மூச்சேயாகும். உள்ளோட்டம், உள்ளிருப்பு, புறவோட்டம், புறஇருப்பு , என நம் மூச்சின் நான்கு நிலைகளையும் வெவ்வேறு தகவுகளில் (ratio), பயன்படுத்துவது நம் மூளைஅலைகளை நெறிப்படுத்தும் (regulate) செயலாகும்.
இசுலாத்தில், 5 வேளை தொழுகை தவிர, ஆறாவதாக “தஹஜ்ஜுத்” என்கிற நள்ளிரவுத் தொழுகை மிக முகாமையானது .
“தஹஜ்ஜுத்” குறித்து இசுலாமிய அறிஞர்கள் மிக உயர்வாகாகக் குறிப்பிட்டுள்ளார்கள். வெவ்வேறு பகுதிகளில் தோன்றுவது ஒரே உண்மையே என்பதனை உணர்க.
வீரசைவம், இசுலாம், இவ்விரண்டின் நள்ளிரவு ஞான நிலையை அடைய மூச்சுணர்வுப் பயிற்சித் தேர்ச்சி தேவை.
“சூபி” (sufi) (இசுலாமிய அறிஞர்கள் ) பயிற்சிகளில், இந்திய தத்துவ குண்டலினி சக்கரங்களைப் போல, ஆறு நுண்ணுணர்வு நிலைகளைக் கண்டுள்ளார்கள். ஒவ்வொன்றிற்கும் லத்திபா (latifa) என்று பெயர்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் திருவாரூரில் வாழ்ந்த கருணையானந்த பூபதிகள் என்ற இசுலாமிய சித்தர் அட்டாங்க யோகச் சிறப்பினை விவரித்துள்ளார்கள் . பேரறிவு என்பது மதங்கள் கடந்த ஒன்று. அதுபோன்றே “மூச்சோட்டமும்” எல்லாம் கடந்த ஒரு பொதுநிலை. “எல்லார்க்கும் பொதுவில் நடம் புரிகின்ற சிவமே “- வள்ளலார்.
இப்போது “அறிவன் சொல் ” எனும் பவுத்த மதம் செல்வோம் . அதன் அடிப்படை நூல் ” ஸ்ம்ருதி உபஸ்தான சூத்திரம் ” ஆகும்.
அடிப்படை தியானம் இரண்டு. 1.சமதா (samatha) (எ) நடுவுநிலைமை 2. விபச்சனா (vipassana) (எ) நுண்ணோக்கு.
இவ்விரண்டு முறைகளின் சிறப்பே அவை தம் குறிக்கோளை அடைய உணர்வுமூச்சினைப் பயன்படுத்துவதே.
மூச்சு, அருள்நிலை மட்டுமே தருமா என்றால், அல்ல அல்ல , அது பொருள்வளமும் அளிக்க வல்லது.
“முழுமூச்சுடன் இறங்கினான் ” என்ற மரபுத்தொடரே (idiom), இதற்கு சான்று.
அருளும் பொருளும் அளிக்கவல்ல “மூச்சோட்ட” “மூச்சுணர்வு” “வளிநிலை” பயிற்சியை நாம் ஒவ்வொரு நொடியும் கடைப்பிடிக்க வேண்டும். “எத்திசையில் இருந்தாலும் எதவத்தைப்பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே” – சித்தர் பாடல். அது போல் எந்நிலையில் இருந்தாலும் “மூச்சுணர்வுடனே” நாம் இருக்க வேண்டும். தொடக்கத்தில், பயிற்சி, முயற்சியுடன் (effort), நடைபெறும். முதிர்வுநிலையில், உணர்வுமூசோட்டம் முயற்சியின்றி (effortless) தன்னிச்சையாக, தானேதானாக, நடைபெறும். இது ஒரு இரண்டற்ற நிலையாகும். மூச்சும், உணர்வும், எண்ணமும் ஒன்றான நிலை.
“ஏசு கிருத்துவும் அவர்கள் மீது தன் மூச்சைச் செலுத்தி “தூய உணர்வைப் ” பெறுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார்”.இது bible வசனம் (john 20 : verse 21 ).
ஐம்போருள்களில் , (பஞ்சபூதங்களில்), இந்தக் காற்றே நம் உடலில் உணர்வுமூச்சாக இருந்து, அரும்பெரும் செயல்கலாற்ற வல்லது . மூச்சின் நுட்பம் அறிந்தவனே ” அறிஞன்” ஞானி” “யோகி’ “அறிவன்’ ” சித்தன்’ “எல்லாமே’ . ” நிலமிசை நீடு வாழ ” இப்பயிற்சி உதவும். உணர்வுமூச்சு பெருகப்பெருக நம் அன்பும் பண்பும் பயனும் கூடும்.
“எல்லாம் ஒன்றே” என்ற இரண்டற்ற (அத்துவித ) ஒருமைநிலையாய் இருப்போம் .
ஒவ்வொரு உணர்வுநிலையிலும் மூச்சாற்றல் செலுத்தி செய்யும் தியானப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகளைப் பின்னர் காணலாம்.
‘புறஞ்சார்’ வளிநிலையால் உடல் வலிமையுறும். ‘அகஞ்சார்’ வளிநிலையால் உள்ளவுறுதி கூடும். உடலும் உள்ளமும் ஒன்றே என்ற உண்மை விளங்கும் . “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ‘ திருமந்திரம் 724
BON என்ற திபெத்திய பழம்மதம் (native religion) பவுத்த்ததுடன் இணைந்து உருவானது ” வஜ்ஜிரயான பவுத்தம் “
.இமமதத்தின் அரிய பயிற்சிகளில் ஒன்று “TUMO YOGA” இப்பயிற்சியால் உடல் வெப்பத்தை கூட்ட முடியும் . இதற்கு மூச்சுணர்வுப் பயிற்சி மிகத் தேவை.
பவுத்தத்தினால் ஈர்க்கப்பட்ட J.H. schultz என்ற செருமானிய அறிஞர் autogenic training (தான்தோன்றி ) எனும்
உடல்மன – இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நுட்பம் கண்டார்.
jack schwarz என்ற மற்றொரு அமெரிக்க அறிஞர் மூச்ச்சாற்றலினால் மூளை அலைகளைத் நெறிப்படுத்தி autogenics உடன்
இணைத்தார். இது ஒரு பெரிய முன்னேற்றமாகும்.
இந்த வளிநிலைப்பயிற்சியால் ஒரு வேதியல் மாற்றம் ( chemical reaction or change) உண்டாவதால் பயிற்சி செய்வோர். எந்தத் துறையிலும் மிகச் சிறந்து விளங்குவர் .தெளிவான முடிவுகள் எடுப்பர். உச்சி முதல் உள்ளங்கால் வரை உயிரோட்டத்துடன் இருப்பர்.
தமிழில் “கால்” என்ற சொல்லுக்கு “காற்று’ என்ற பொருளும் உண்டு. கொஞ்சம் அருணகிரியாரின் “கந்தரலங்காரம்” போவோமா? ” அவன் (முருகன்) கால்பட்டழிந்தது என் தலை மேல் அயன் கையெழுத்தே” என்பார். இதனை முருகன் “திருவடிக்காற்று” என் மூளையில் பட்டு பிரமன் எனக்கு உருவாக்கிய ” தலையெழுத்து” மாறியது என்றும் கொள்ளலாம்.
இது மெய்யே .
இப்போதைய அறிவியலாளர்கள் மூச்சையும் உணர்வையும் கொண்டு DNAவையே மாற்ற முடியும் என்று கண்டுள்ளார்கள் .
இவர்களில் முன்னணியில் உள்ளவர்கள் candace b pert மற்றும் bruce lipton ஆவர் .
என்ன? !!! மூக்கின் மேல் விரல் வைக்கத் தோன்றுகிறதா ?