வளிநிலை (எனும் ) சீகுங்5…26/11/2012

5. செம்பொருள் மூச்சு

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்

மல்லல் மா ஞாலம் கரி …குறள் 245

அருளோடு  வாழ்பவர்களுக்கு துன்பமில்லை  என்பதற்கு,நிறைந்த காற்றோடு வாழும் உலகு வளமையோடு இருப்பதே சான்று .

கருணையும்  காற்றும் ஒன்றே  என்பது நமக்குப் புரிகிறது .அடுத்தது முதற்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்

முதற்றே உலகு

எழுத்துக்களுக்கு அகரம் முதல் போன்று உலகிற்கு கண்கண்ட மூலம் பகவன் என்னும் ஞாயிறே .காலத்தைப் பகுப்பவன் என்பதினால்,

பகவன் என்று  பெயர் .இருக்கு வேதத்தில் குறிப்பிட்டுள்ள  விசுவாமித்திரன் என்ற அரசத்துறவிக்கு அறிவுவிளக்கமாகத் தோன்றிய

காயத்திரி மந்திரமும் முதற்குறளும் ஒன்றே  என்பது புரிகறது

காயத்திரிப் பயிற்சியின் போது பிராணாயாமப் பயிற்சியும் உடன்செல்லும் .அதுபோன்றே உலகச்சுழற்சியால் காலையில் தோன்றும் ஆதிபகவன் ஆற்றல் நமக்கு முழுமையாகப் புத்துணர்ச்சி அளிக்கப் பயன்படுவது வளிநிலை எனும் மூச்சுப்பயிற்சியே .

முதற்குறளும் காயத்திரியும் மூச்சும் ஒன்றே .அகரம் போன்றவன் ஆதிபகவன் என்பது குறள் .எல்லாவுலகிற்கும் ஒளிதரும் சூரியன் என்  அகத்தில் எழட்டும் என்பது காயத்திரி .

இனி இப்பயிற்சியில் உள்ள சில நுட்பங்களைப் பார்போம் .நம்  உணர்வுகள் எல்லாம் ஒருமை சார்ந்த இருமையே .அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது.எனவே புறஞாயிறு போன்றே நம் உள்ளே உள்ளது அகஞாயிறு .இந்த உள்ளொளியின் துணையுடனே நாம்

எல்லாவற்றையும் அறிகிறோம் , கற்கிறோம் .இந்த அகமும் புறமும் வெவ்வேறு போல் தோன்றினாலும் உண்மையில் ஒன்றேயாம் .

நெருப்பு அணையாமல் இருக்க உயிர்வளி (oxygen) தேவைப்படுவது போல, சூரியஒளியின் உணர்வு நம்முள் அணையாமல் இருக்கப் பயன்படுவது வளிநிலைப் பயிற்சியே .

எந்நேரமும் நடுவுநிலையுடன் இருக்க உதவுவதும் இப்பயிற்சியே

.”கேடும் பெருக்கும் இல்லல்ல நெஞ்சத்துக்

 கோடாமை சான்றோர்க்கு அணி ” குறள் 115

இந்த அருள்நிலை மூச்சுப்பயிற்சியை நாம் உணர்வுமொழிகளுடன் மேற்கொள்ளும்போது அதுவே உலகவாழ்க்கைக்குத் தேவையான “பொருள் என்னும் பொய்யாவிளக்காக” மாறுகிறது .

நடைமுறைக்கு உதவாத தத்துவப் பிதற்றலுக்கு “வெற்றுவேதாந்தம்” என்று பெயர் . ஆனால் அருளும் பொருளும் அளிக்கவல்ல மூச்சுயோகப் பயிற்சிக்கு “மெய்ப்பொருள்” என்றே பெயர் .இந்த மெய் (உடல்) தனக்குள் பொருள் (புதையல்)இதுவே .தனக்குள் இருந்து தன்னையே மேம்படுத்தும் பொருள் இது. இதன் ஆற்றல் நம் நாடினரம்புகளுக்கு உள்ளே எல்லாம் ஊடுருவி அவற்றை மிக வலிமைப்படுதக் கூடியது .

வளிநிலை ஆற்றல் உள்ளிருந்து உருவாக்கப்பட வேண்டும் . பிறகு எல்லாஇடத்தும் பரப்பப்பட வேண்டும்.(generation and dispersal)

எல்லா மூசுப்பயிற்சிக்கும் இவை  இரண்டே அடிப்படை .

இனி வளிநிலைப் பயிற்சி ஒன்றில் மூழ்கித் திளைப்போம் .திண்மை அடைவோம் .அதற்குமுன் நம் மனம் எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு இருவர் அறிவுரையுடன் துவக்குவோம் .காலை மாலை இருவேளையும் இதே  முறை பின்பற்றவும் .

1.இராமலிங்க அடிகள் அவர்களின் “எல்லாம் செயல்கூடும்” என்ற மனவள  மாமந்திரத்தை 21 முறை மனத்துள் கூறவும்

2.பிரெஞ்சு உளவியல் அறிஞர் emile coue (1857-1926) உருவாக்கிய கீழ்க்கண்ட மனவள மந்திரச் சொற்றொடரை 21 முறை கூறவும்

EVERYDAY IN EVERYWAY, I AM GETTING BETTER AND BETTER

.ஒவ்வொரு நாளும் எல்லா வகையிலும் மேன்மையடைகிறேன் , மேன்மையடைகிறேன்.( எம் மொழிபெயர்ப்பு _ஆர் )

இப்பயிற்சிக்கு சில  நிமிடங்களே போதும் .இப்பயிற்சி ஒருவர் உடலிலும் உள்ளத்திலும் அற்புதங்களை உண்டாக்கும் .

இப்போது முதல் வளிநிலைப் பயிற்சி .சீரான மூச்சுடன் பயில வேண்டும் .

கண்கள் பாதியளவு மூடி இருத்தல் நலம் . மனவுணர்வு மூச்சின் மீதே இருக்க வேண்டும் மூச்சு உள்ளிழுக்கும் போது கருவிழி நிதானமாக

மேல்நோக்கி புருவமத்தியைப் பார்க்க வேண்டும். மூச்சு வெளியே விடும்போது கருவிழி நோக்கு  கீழ்நோக்கி மூக்கின் வாயிலின் அருகே இருக்க வேண்டும் .நிதான  மூச்சுடன் பயில வேண்டும் .பதற்றமே கூடாது .எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம் . உணர்வெல்லாம் செயல் மேல் இருக்கட்டும் .விளைவுகள் தாமே நன்மையாய் முடியும் .நம் பணியை செய்தால் மூச்சு, தன் பணியைச செய்யும் .இந்த துவக்கநிலைப் பயிற்சியை காலையும் மாலையும் 10 நிமிடங்கள் செய்தல் நலம் ,இது போல் துவக்கநிலைப் பயிற்சியில் பல வகைகள் (variants) உள்ளன . அவற்றைப்  பின்னர் காண்போம் .கையாள்வோம் .திருமூலர் அழைக்கிறார் .

“கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி

வீணாத்  தண்டூடே வெளியுறத் தானோக்கி

காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு

வானாள் அடைக்கும் வழி அதுவாமே” . திருமந்திரம் 588.

“சிற்றின்பத்தின் மீது  செல்லாது தடுத்து, மனதை ஒருமுகப்படுத்தி, வீணாதண்டு  எனும்  நடுநாடியின் வழியே பிராணனுடன் செலுத்தி, செவியுணர்வும் , காட்சியுணர்வும், புறஞ்செல்லாமல், உள்நோக்கி, இருப்பவர்க்கு, வாழ்நாள் குறுகாமல் நீண்டிருக்கும் .”

இப்பயிற்சிகள் செய்யும்போது சில அனுபவங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் .வேறு சில அனுபவங்கள் வெவ்வேறாக இருக்கும் . பயிற்சி முறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் . அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நலம் . ஏனென்றால் அவற்றை மெய்ப்பிக்க இயலாது . இதனால் தான் வள்ளலார் சில  அனுபவங்களை “நிராதார லக்ஷணம் ” என்கிறார் .

புறக்காட்சி அனைவர்க்கும் பொது,,, மயக்குவது  . அகக்காட்சி பொதுவன்று .அனால் அறிவளிப்பது .

இதனை திருமூலர் ” முகத்திற் கண்கொண்டு பார்கின்ற மூடர்காள் …. அகத்திற் கண்கொண்டு பார்மின்கள் ” என்பார் .

துவக்கநிலைப் பயிற்சிதானே என்று அசட்டையாக இருக்க வேண்டாம் .துவக்கத்தில் நாம் கற்றுக்கொண்ட செயல்கள் பலவும், நம்  இறுதிவரை துணைவரும் .அகராதியில் சொற்கள் தேட வேண்டுமென்றால், நாம் பிள்ளைப்பருவத்தில் பயின்ற அகரவரிசை துணைநிற்கும் அல்லவா? இது வளிநிலைப் பயிற்சிக்கும் பொருந்தும் .சீராகத் தொடர்ந்து செய்துவரும் இப்பயிற்சி நம்மை இறுதியாகப் 

பெற்றிநிலைக்கு (சித்திநிலை ) அழைத்துச் செல்லும் . இதனயே திருமூலர் கூறுகிறார் .

“நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு

உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்

துயரற நாடியே தூங்க வல்லோர்க்குப்

பயனிது காயம் பயமில்லை தானே “. திருமந்திரம்  605

“விழிகள் இரண்டையும் புருவநடுவில் வைக்க வேண்டும் .மனதையும் பிராணனையும் வெளியே விடாமல் உள்ளே வைத்து , மகிழ்ச்சியுடன் இளைப்பாற வல்லோர்க்கு கிடைக்கும் பயன் என்ன தெரியுமா? இந்த உடல் அழியும் என்ற அச்சமே அவர்களுக்குத் தேவையில்லை . நீடூழி வாழ்வர் …                                                                                 (மூச்சோட்டம் தொடரும்

!!!அடுத்த இதழில் alexandra david neel என்ற பிரெஞ்சுப் பெண்அறிஞரின் மூச்சு ஆராய்ச்சி!!! .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *