வளிநிலை எனும் சீகுங்4 04/11/2012
4. மந்திரமூச்சு
“வளியினை வாங்கி வயத்தில் அடக்கிய
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனுமாமே ” திருமந்திரம் 569
மூச்சுகாற்றை நன்கு உள்வாங்கி, தன்வயப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்தால், ஒருவருடைய உடல் முதுமையிலும் இளமையுடன் இருக்கும் .
தன்னுள்ளே இருக்கும் பேருணர்வாகிய ஆழ்மனகுருவின் துணையையும் பெற்றால் , காற்றைவிட மென்மையாக எல்லா இடத்திற்கும் செல்லும் ஆற்றல் பெற்றவராக இருக்க முடியும் .
பருவுடலும் நுண்மனமும் ஒன்றாகி உணர்வுடன் கூடி சித்தர் போல் எவ்விடத்தும் எளிதில் செல்ல இயலும் .
இந்த உயிர்மூச்சை எண்ணஅலைகள் துணையுடன், உடலின் எந்தப்பகுதியில் பதியவைக்கிறோமா, அந்தப்பகுதி வலிமை பெறும் .
வலிநிளைப்பயிற்சிகளை நம்நாட்டுச் சித்தர்கள் முற்காலத்தில் உருவாக்கியபோதிலும்,தற்காலத்தில் அவை உறக்கநிலயிலேயே உள்ளன .அவற்றை மறுமலர்ச்சியடையச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு .
இதற்கு மாறாக, சீனத்திலும் ஜப்பானிலும் பலரால் வலிநிளைப்பயிற்சி மக்களுடைய அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மலர்ந்துவிட்டது.அவர்கள் அரியசெயல்கள் புரிகின்றனர்.
KOZO NISHINO என்ற ஜப்பானிய அறிஞர் மூச்சுப்பயிற்சியால், முதுமையிலும் இளமையோடிருக்கும் வழியறிந்து பலருக்கும் அந்த நுட்பத்தை பயில்விக்கிறார் .
அவரே தம் 86வது அகவையில் இளமையோடு உள்ளார் .
KANZAWA SENSEI என்ற மற்றொரு ஜப்பானிய வீரக்கலை அறிஞர், மூச்சுணர்வுப் பயிற்சியால், தொலைவிலிருந்தே, மூசாற்றலினாலும் , கையைசைவினாலும், விலங்குகளையும், மனிதர்களையும், வயப்படுத்தி உறங்கவைக்கும் ஆற்றல் பெற்றுள்ளார் . அட்டமாசித்திகளில் இதற்கு
“வசித்துவம் ” என்று பெயர்.
வளிநிலை என்பது வெறுமையாய் மூச்சை உள்வாங்கி வெளியேவிடுவது அன்று. இதில் எண்ணத்தின் பங்கு சரிநிகர் அளவு உண்டு உலகியல் வாழ்க்கைக்கு நாம் பொருள் ஈட்டுவதுபோல, உடலியல் வாழ்க்கைக்கு நாம் ஈட்டும் பொருளே மூச்சாற்றலாகும். இந்தப்பொருளே மெய்விளக்கு .
“பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று ” குறள் 753
. இக்குறள் இந்த மூச்சுப்பொருட்செல்வத்திற்கும் பொருந்தும் .வளிநிலைப்பயிற்சியால் ஈட்டிய “பொருள்”,
எவ்விடத்தும் சென்று “உடலமனமாசு ” எனும் இருள் அறுக்க வல்லது.
மின்பொறிகள் அறிமுகமாகுமுன்பு, நீரிறைக்க ஏற்றத்தைப் பயன்படுத்துவர். ஒருமுறை ஏறி இறங்கினால் அது வயலுக்கு நீர் பாய்ச்சும்.அதுபோல நம் மூச்சும்,ஒவ்வொருமுறையும், உணர்வுடன் உள்வாங்கி, வெளியே விடப்ப்படும்போதும் உடலும் உள்ளமும் வலிமைபெறும். நம் ஆற்றல் கூடும்.
மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் ஆற்றல்கனல்,உயிர்மூச்சின் துணையுடன் ஒவ்வொரு சக்கரதின்வழியே ஏறும்போதும், அச்ச்சக்கரத்தின் வலிமையையும் தான் எடுத்துக்கொண்டு உச்சியிலுள்ள ஆயிரயிதழ்த்தாமரையை (சகஸ்ராரம் ) அடைகின்றது .
எனவே இந்த உணர்வுமூச்சானது, ஏணியாகவும், ஏறுபவனாகவும், எடுத்துச்செல்லப்படும் பொருளாகவும் உள்ளது. மூச்சுமண்டலச் செயலால் தான்
மற்ற உடலியக்கங்கள் செயல்படுகின்றன என்று தற்கால அறிவியலும் கூறுகின்றது .அதே அறிவியல், ஆறு சக்கரங்களுக்கு இணையான . துணையான
ஆறு நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன என்றும் அவை செம்மையாகச் செயல்பட மூச்சுப்பயிற்சி உதவும் என்றும் கூறுகின்றது .
இயல்பான உணவு உண்ணாமல் மூச்சையே உணவாக்கி வாழ்பவர்களுக்கு BREATHARIANS என்று பெயர் .உலகில் BREATHARIANS பலர் உள்ளனர் .
நம் நாட்டில் சூரியக்கதிர்கலையே மூச்சுடன் உள்வாங்கி உணவாக்கிகொண்டு வாழ்பவர்களில் இருவர் குறிப்பிடத்தக்கவர்கள் . 1. குஜராத்தைச் சேர்ந்த ஹீராரதன் மனேக். 2. சூரியயோகி என அழைக்கப்படும் உமாசங்கர் என்கின்ற வங்காளத் துறவி . இக்கட்டுரையாளர் 4 ஆண்டுகளுக்கு முன்பு திரு,உமாசங்கரைச் சந்தித்தபோது , அவர் தம் சூரியயோக மூச்சுப்பயிற்சி முறைகளை விளக்கினார் .
மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் பல அதிசயங்களை நிகழ்த்தலாம் .இடகலை, பிங்கலை எனும் இட வல நாசிவளியோட்டங்களை மாற்றிமாற்றி பயன்படுத்தினால் , “வரும்பொருள் ” எனும் எதிர்கால நிகழ்வுகளைக் கூற முடியும் .பலர் நோய் தீர்க்கவும் இயலும்.
யோகிகள் கையில் T வடிவ மரக்கட்டை வைத்திருப்பர் .அதன் பெயர் யோகதண்டம் .அதனை இட வலப் பக்கங்களில் ஊன்றி மூச்சு ஓட்ட பாதையை மாற்ற முடியும்.இக்கலை பற்றிய செய்முறைகள் “ஞானசரம் ” மற்றும் “சரயோகம் ” ஆகிய நூல்களில் உள்ளன (இவற்றின் விரிவு பின்னர் )
இந்த சரயோகப் பயிற்சியால் மூளையின் இட வலச் செயல்திறனைக் கூட்ட முடியும்
ஹவாய்த் தீவுகளில் வாழ்ந்து வரும் கஹுணா என்ற தொல்குடியினர் மூச்சுப்பயிற்சியின் வாயிலாக ஆழ்மனதையும் உலகம் முழுதும் பரவியுள்ள இறைமனதையும் தொடர்புகொள்ளும் கலையை அறிந்துள்ளனர் .தொலைவிலிருந்தே நிகழ்வுகளை இயக்கம் ஆற்றல் உடையவர்கள் இவர்கள்,
இந்த கஹுணா தத்துவங்கள் நம் வள்ளல் இராமலிங்கர் அவர்கள் தம் “பேருபதேசம்” எனும் உரையில் கூறியுள்ள தத்துவங்களோடு ஒத்துப்போகின்றன . என்ன வியப்பு ,!!!, (இவற்றின் ஒப்பாய்வு பின்னர் ).
இதே போல் 20ஆம் நூற்றாண்டில் திருவொற்றியூரில் வாழ்ந்த ஞானவள்ளல் பரஞ்சோதி என்ற இசுலாமிய யோகி திடமூச்சை மென்மூச்சாக்கி உணரும் எளியமுறை குண்டலினிப்பயிற்சியினை பல்லாயிரக்கணக்கானோர்க்கு தீட்சை அளித்து பயிற்றுவித்தார் .
இமயமலை அடிவாரத்தில் வாழ்ந்த சுவாமி ராமா என்ற யோகி மூச்சுயோகப் பயிற்சியினால் இதயத்துடிப்பினை சில நிமிடங்கள் நிறுத்திக் காட்டினார் .
திபெத்திய சித்தியல் நூல்களில் பிராணன, சீ, ஆகியவற்றிற்கு WINDHORSE என்று பெயர்
இப்போது திருமந்திரத்திற்கு தாவுகிறோம் . பாய்கிறோம் .
“புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களி தரும
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையோர்க்கே ” திருமந்திரம் 566
என்ன அழகாகத் திருமூலர் கூறுகிறார் பாருங்கள்
“உணர்வுடன் இருப்போர்க்கே கூறுகின்றேன் .எந்தப் பறவையைக் காட்டிலும் வேகமான, திறமையான இந்த மூச்சுப்பயிற்சி எனும் குதிரையின் துணையுடன்
எப்போதும் இன்பநிலையில் இருக்கலாம் . இதற்கு கள்ளுண்ணத் தேவையில்லை .மிகச் சுறுசுறுப்புடன் துள்ளி நடக்கலாம் .சோம்பல் என்பதனை அறவே தவிர்த்துவிடலாம் “
உயிர்க்காற்றும் மனமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை . இதனை முன்னமே நாம் விவரித்துள்ளோம் . மூளை அலைகளை மூச்சின் துணைகொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று கண்டோம் . இது தற்கால அறிவியலார் கண்டுபிடிப்பா ?
நம் முப்பாட்டனார் சித்தர் திருமூலர் ஞானக்கண்ணில் தோன்றியதாகும் .
“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்போர்க்கு
மன்மனதுள்ளே மனோலயமாமே ” திருமந்திரம் 620
“எங்கெல்லாம் நினைப்புதொழில் செய்யும் மனம் உள்ளதோ , அங்கே உயிர்க்காற்றும் உண்டு எங்கு மனம் இல்லையோ அங்கே மனமும் இல்லை .
இந்த மனதுடன் (காற்றுடன்) மகிழ்ச்சி கண்டோர்க்கு அதுவே மனம் ஒடுங்கும் நிலை எனும் வெற்றிடமாகும் “.
(மூச்சோட்டம் தொடரும் )